கல்யாண வாழ்க்கையை களங்கப்படுத்தும் முந்தைய ரகசியங்கள்

ஆயிரம் கனவுகளுடன் ஆரம்பமாகிறது ஒவ்வொரு ஜோடியின் திருமண வாழ்க்கையும்! ஆனால் திருமணத்திற்குப் பின்பு, அடுக்கடுக்கான பிரச்சினைகளால் கருத்து மோதல்களுடன் வாழும் தம்பதிகளே அனேகம்.

ஆயிரம் கனவுகளுடன் ஆரம்பமாகிறது ஒவ்வொரு ஜோடியின் திருமண வாழ்க்கையும்! ஆனால் திருமணத்திற்குப் பின்பு, அடுக்கடுக்கான பிரச்சினைகளால் கருத்து மோதல்களுடன் வாழும் தம்பதிகளே அனேகம். விவாகரத்து கோருபவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன காரணம்? திருமணத்துக்கு முன்பே எல்லா வகையிலும் ஒரு ஜோடி திருமண பந்தத்திற்கு தயாராகாததுதான் காரணம் என்கிறது புதிய ஆய்வு!

இளம் ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு எப்படி தயாராக வேண்டும், திருமணத்திற்குப் பின்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை என்பதில் எப்படி தெளிவு பெறுவது? என்பது பற்றி அந்த ஆய்வு சொல்லும் உண்மைகளை அலசுவோம் வாருங்கள்!

திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங்: ‘பெண்ணிடம் கொஞ்சம் பேச வேண்டும்’ என்று பெண் பார்க்கச் செல்லும் இளைஞர்கள் கேட்பது வாடிக்கை. கொஞ்சமல்ல நிறையவே பேச வேண்டும் என்கிறது நவீன ஆய்வு. திருமண ஜோடிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வது மட்டுமல்லாமல், இருவரும் என்னென்ன ஆசைகள், நோக்கங்கள், எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் இணைகிறார்கள், அவர்கள் இருவருக்கும் இடையே உறவு ஒத்துவருமா என்பதை தகுந்த மனநல ஆலோசகர் முன்னிலையில் கவுன்சலிங் பெற்று திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.

ஆமாம் திருமணத்திற்கு பின் முட்டி மோதிவிட்டு கவுன்சலிங் செல்வதைவிட, திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங் இருவரது மணவாழ்விலும் பூங்காற்று வீச புதிய பாதையை காட்டும் என் கிறார்கள் ஆய்வாளர்கள். காதலர்களுக்கும் இந்த கவுன்சலிங் கட்டாயம் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

என்னென்ன விஷயங்களை இளம் ஜோடியினர் கவனிக்கவேண்டும் என்பது பற்றிய ஆய்வு கூறும் பட்டியல் இனி…

எதிர்பார்ப்புகள்: ஆசைகளுடனே இளம் ஜோடி இல்லறத்தில் இணைகிறது. இதில் எதிர்பார்ப்புகள் இருவருக்கும் இருக்கும். துணையின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் என்ன என்பது இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே ஜோடிகள் ஆசைகளை பகிர்ந்து கொள்வது உண்டு. ஆனால் எதிர்பார்ப்புகளில் எது நியாயமானது, எது நடைமுறைக்கு சாத்தியமானது என்பது பற்றிய தெளிவு வேண்டும். இதற்குத்தான் கவுன்சலிங் தேவைப்படுகிறது. நிறைவேறாத, அதிகபட்ச எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினால், வெறுப்பும், மன அழுத்தமும் எளிதில் தொற்றிக் கொள்ளும். பிறகு அதுவே பிரச்சினைகளின் வேராக இருந்து பிரிவினைக்கு காரணமாகிவிடும். பல நேரங் களில் துணைவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது துணைவிக்கும், துணைவியின் எதிர்பார்ப்பு துணைவருக்கும் வெளிப்படையாக தெரியாததால்கூட பிரச்சினைகள் வளர்வதுண்டு.

பழைய நடத்தைகள்: தம்பதிக்குள் பிரச்சினையை உருவாக்கும் முக்கியமான காரணி, திருமணத்திற்கு முந்தைய நடத்தைகள். மனம் விரும்பாத அல்லது தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்ட ஒரு தவறால், மனதில் குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அது எப்போது தனது துணைக்கு தெரியவருமோ? என்ற உறுத்தல் வாழ்க்கையை பாதிக்கும். வேறு யாராவது குறுக்கிட்டு உண்மைகளை சொல்லி வாழ்க்கையை நாசமாக்கிவிடுவார்களோ? என்ற பய உணர்வுகூட எழும்.

அதற்காக ‘மனம் விட்டு பேசுகிறேன்’ என்று கடந்த கால விஷயங்களை எல்லாம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. திருமணத்திற்கு பின் இருவரும் எப்படி வாழ வேண்டும், எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கடந்த கால உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட இயலாது என்பதை இருவரும் புரிந்திருக்க வேண்டும். என்றாவது ஒருநாள், நம்மைப் பற்றிய எதிர்மறை ரகசியம் யார் மூலமாகவோ துணைவருக்கு தெரியவந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தையும் இருவரும் பெற்றிருக்க வேண்டும். பல மகிழ்ச்சியான தம்பதிகள்கூட இந்த இடத்தில்தான் தடம் மாறிவிடுகிறார்கள். கடந்த கால கசப்புகள் நிகழ்கால இன்பங்களை இல்லாமல் செய்து விடக் கூடாது. கடந்த காலத்தைவிட வாழும் காலம்தான் முக்கியம்.

விட்டுக்கொடுத்தல்: விட்டுக்கொடுப்பது வாழ்க்கையில் பல சந்தோஷங்களுக்கு வழிவகுக்கும். ஆனால் யார் விட்டுக்கொடுப்பது? எவற்றை விட்டுக்கொடுப்பது? என்பதில் தெளிவு இல்லாததால்தான் தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. சில நேரங்களில் விட்டுக்கொடுத்தல் சுயமரியாதையை பாதிக்கும் விஷயமாக இருக்கும். அந்த நேரத்தில் மற்றவர் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு இறங்கி வர வேண்டும்.

எப்படிப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி வருகிறது, இதையெல்லாம் தவிர்க்க என்ன வழி என்பதை இருவரும் யோசித்து அதற்கேற்ப ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கலாம். பிரச்சினைகளை உருவாக்கும் சூழல்களை தவிர்க்கலாம்.

சந்தேகம்: தேவை இல்லாமல் சந்தேகப்படுவது, கற்பனை செய்து விஷயங்களை மிகைப்படுத்துவது இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை பெரிதாக்கும். சந்தேகங்களை அமைதியாக கேட்டு தெளிவு படுத்துவது, தவறுகளை திருத்திக் கொள்வதன் மூலமாக சந்தோஷமாக வாழலாம். சந்தேகத்தை என்ன செய்ய வேண்டும், எப்படி விரட்ட வேண்டும் என்பது பற்றி கவுன்சலிங்கில் சிறந்த தீர்வுகள் வழங்கப்படும்.

மற்றவர் தலையீடு: தம்பதிகள் இருவரும் மன ஒற்றுமையுடன் இருந்தாலும் குடும்ப நபர்களால் கருத்து வேற்றுமை ஏற்படலாம். மற்றவர்களின் செயல்களுக்கு நாம் குற்றவாளியாக்கப்படலாம். அந்த நேரத்தில் சமாதானப்படுத்துவது, சமாளிப்பது எல்லாம் தனித்திறமை. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒருவர் துணை, மற்றொருவருக்கு தேவை.

குழந்தையில்லாத தம்பதிகளாக இருந்தால் மற்றவர்கள் தலையீடும், அறிவுரைகளும் தவிர்க்க முடியாது. சிலநேரம் ஆலோசனைகள் வழங்குவோம் என்று மேலும் நோகடித்து விடுபவர்களும் உண்டு. இதுபோன்ற சமயங்களில் தம்பதியர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளைப் போன்று இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய கவுன்சலிங் பிரபலமாகவில்லை. சிங்கப்பூரில் கவுன்சலிங் அலுவலகத்தில் முன்பதிவு செய்துவிட்டு புதுமண தம்பதிகள் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்களின் மனநிலைக்கேற்ப, குடும்ப சூழலுக்கேற்ப தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அது அவர்களுடைய திருமண வாழ்க்கையை காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். திருமண பந்தத்தில் வசந்தம் வீச இந்திய இளம் ஜோடிகளும் தகுந்த கவுன்சலிங்கை பெறலாம்!

திருமண-வாழ்க்கை

Recent Posts